விவாகரத்துச் சட்டங்கள்

Help Us Spread the Word!

ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழ் பின்வரும் மூன்று திருமணஞ்சார் நிவாரணங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

  1. விவாகரத்து ஃ மணநீக்கம்
  2. சட்டமுறையான பிரிவு
  3. திருமண வெற்றாக்கல்

இந்தகட்டுரையானது முக்கியமாக இலங்கையில் உள்ள விவகரத்துசட்டங்கள் தொடர்பாக ஆராய்கின்றது.

விவாகரத்து என்பது திருமணத்தின் மூலம் உருவாகின்ற பல்வேறு உரிமைகளையும் திருமணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தார உறவினையும் நீதிமன்ற கட்டளை ஒன்றின் மூலம் இல்லாதொழிப்பதாகும்.

இலங்கையில் விவாகரத்துத் தொடர்பில்; கண்டிய மற்றும் முஸ்லிம் சட்டங்களால் ஆளப்படுவோரைத் தவிர பொதுச் சட்டமானது முதன்மையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பொதுச்சட்டத்தின் கீழ் முக்கியமாக இரண்டு சட்டங்கள் விவாகரத்துத் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை விபரிக்கின்றன

  1. பொதுத் திருமணங்கள் கட்டளைச் சட்டம்
  2. குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை

1907ம் ஆண்டின் 19ம் இலக்கபொதுத் திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 19(2) விவாகரத்துப் பெறுவதற்கான அடிப்படைத் தேவைப்பாடுகளைக் குறித்துரைக்கின்றது. குறித்த சட்டப் பிரிவின்படி விவாகரத்தைப் பெறுவதற்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் காணப்படுகின்றன.

  1. திருமணத்திற்குப் பின்பான சோரம்போதல்
  2. வன்ம உறவறுப்பு
  3. திருமணத்தின் போதான குணப்படுத்த முடியாத மலட்டுத்தன்மை

மேற்குறித்த மூன்று காரணங்களும் பின்வருமாறு விபரிக்கப்படுகின்றன.

1.சோரம்போதல்

திருமண உறவுக்குப் புறம்பாகத் தனது சட்டரீதியான வாழ்கைத்துணை அல்லாத வேறு ஆண் அல்லது பெண்; ஒரு நபரால் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவே சோரம்போதல் எனப்படுகின்றது. சோரம்போதலில் தொடர்புபட்ட மற்றைய நபர் திருமணமானவராகவோ அல்லது திருமணமாகாதவராகவோ இருக்க முடியும்.

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 602இன் படி சோரம் போதல் என்பது நீதிமன்றத்தின் திருப்திக்கான உச்சபட்சமாக நிரூபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

சோரம்போதலின் நிரூபணத் தன்மை தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புகளில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

உூம்: ஜெயசிங்கே எதிர் ஜெயசிங்கே என்ற வழக்கில் நீதிமன்றம் சோரம்போதல் என்பது குற்றவியல் வழக்குகளைப் போன்று நியமனான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கவேண்டும்

எனத் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பானது தர்மசேனே எதிர் நவரத்னே என்ற வழக்கிலும் பின்பற்றப்பட்டிருந்தது.

ஆனால் ஆலம்மாள் எதிர் நடராஜா என்ற வழக்கில் நிகழ்வுச் சமனிலை அடிப்பமையில் நிரூபித்தல் போதுமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தற்போது, நீதிமன்றம் சோரம்போதல் என்பது நியாமனான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கவேண்டும் என்ற தேவைப்பாடு இல்லை என்னும் அதனை தெளிவான சாட்சியங்களோடு நீரூபிக்கவேண்டும் என்றும் கருதுகின்றது. சோரம் போதலின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது கூட்டு எதிராளியும் பெயரிடப்பட வேண்டும். இது குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 598இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 602இன் படி பின்வரும் சந்தர்ப்பங்களில் கூட்டு எதிராளியைப் பெயரிடவேண்டிய அவசியமில்லை.

  • எதிராளியானவர் விபச்சாரியொருவரைப்போல் வாழ்க்கை நடாத்துகின்றார்
  • சோரம்போதலில் தொடர்புபட்ட மற்றைய நபரை அறியமுடியாதுள்ளது
  • சோரம்போதலில் தொடர்புபட்ட மற்றைய நபர் இறந்துவிட்டார்

2.வன்ம உறவறுப்பு

வன்ம உறவறுப்பு என்பது திருமணக்கடமைகளை செய்யாது முற்றாக புறக்கணித்தல் ஆகும். வன்ம உறவறுப்பின் அடிப்படையில் விவாகரத்து தாக்கல் செய்யும் வழக்காளி பின்வரும் இரண்டு விடயங்களை நிரூபிக்கவேண்டும்.

  1. உளரீதியான அம்சம் (வன்மமுறையில் திருமண உறவினை முடிவுறுத்தும் நோக்கம்)
  2. உடல்ரீதியான அம்சம் (திருமண உறவை அறுத்தல்)

வன்ம உறவறுப்பு பின்வரும் இரண்டு வழிகளில் விவாதிக்கப்படலாம்.

  1. வன்ம உறவறுப்பு
  2. அமையவழி வன்ம உறவறுப்பு

குற்றம் செய்யும் நபர் திருமண இல்லத்தினை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் நேரடியான வன்ம உறவறுப்பு நிகழ்கின்றது. ஆனால் பாதிக்கப்படும் நபர் மற்றைய நபரின் செயலின் காரணமாக திருமண இல்லத்தை விட்டு வெளியேறும் பொழுது அமையவழி வன்மஉறவறுப்பு நிகழ்கின்றது. வன்ம உறவறுப்பானது திருமண உறவொன்றில் ஒரு நபர் திருமண இல்லத்தினை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் திருமண உறவினை முடிப்பதற்கான எண்ணம் அங்கு நிகழ்தகவு சமநிலையின் அடிப்படையில் நிரூபிக்க போதுமானதாக உள்ளது.

இலங்கையில் வன்ம உறவறுப்பு கைவிடுதல் என்பது விவாகரத்தின் முக்கிய வடிவமாக காணப்படுகின்றது.

வன்ம உறவறுப்பிற்கான எதிர்வாதங்களாவன சுயநினைவற்ற நிலைமை, துன்புறுத்தல், தரப்பினருக்கிடையே ஒத்துப்போகாத தன்மை போன்றவை காணப்படுகின்றன.

3.திருமணத்தின் போதான குணப்படுத்த முடியாத மலட்டுத்தன்மை

திருமணத்தின் போதான மலட்டுத்தன்மையானது பொது திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு19(2)இன் கீழ் விவாகரத்து எடுப்பதற்கான காரணிகளில் ஒன்றாகும் என்பதோடு இலங்கையில் உள்ள சட்டத்தின் கீழ் வெற்றான தீர்வையை எடுப்பதற்கான காரணிகளுள் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பொது திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு19(2)இன் கீழ் திருமணத்தின் பின்னரான குணப்படுத்தமுடியாத மலட்டுத்தன்மையானது விவாகரத்துப் பெற ஒரு காரணியாக அமையாது.

இலங்கையில் பொது திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டதன் மூன்று காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து பெறமுடியும். விவாகரத்து வழக்கொன்றில் திருமணக்குற்றமானது கட்டாயமாக நிரூபிக்கப்படவேண்டும். விவாகரத்து வழக்கொன்றில் சான்று கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் திருமணக் குற்றத்தினை கூறும் ஆண் அல்லது பெண் அவரே அக்குற்றத்தினை நிரூபிக்கவேண்டும்.

விவாகரத்து வழக்கொன்றில் பின்வரும் இரண்டு வகைகளில் பிரிமணைப்பணமானது வழங்கப்படலாம்.

  1. வழக்கானது நிலுவையில் உள்ள காலப்பகுதியில் வழங்கப்படும் பிரிமணைப்பணம் – குடியியல் நடைமுறைச்சட்டக்கோவையின் பிரிவு 614இன் அடிப்படையில் நீதிமன்றத்தினால்; வழக்கின் தீர்ப்பானது வழங்கும் வரை திறத்தவர்களை விவாகரத்து பிரிமணைப்பணத்தினை வழங்குவதற்கு கட்டளையிடப்படலாம்.
  2. நிரந்தர பிரிமணைப்பணம் – நீதிமன்றத்திற்கு திறத்தவர் ஒருவரினை கட்டாய பிரிமணைப்பணத்தினை தீர்வையோடு செலுத்த கட்டளையாக்க அதிகாரமுள்ளது. (குடியியல் நடைமுறை சட்டக்கோவையின் பிரிவு 615)

Source: Women In Need


Help Us Spread the Word!

ප්‍රතිචාරයක් ලබාදෙන්න

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *