பெண்கள் உரிமைகள்
பால்நிலை சமத்துவம் என்னும் கருத்தானது தற்கால உலகத்தின் பிரபல்யமான ஒரு பேசுபொருளாகும். கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது பெண்கள் உரிமைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகின்ற போதும், ஆணாதிக்க சிந்தனையுடன் பின்னிப்பிணைந்துள்ள சமூகக் கட்டமைப்புக்களை மாற்றுவதென்பது உடனடியாகச் செயற்படுத்தப்பட முடியாததாகும். பெண்கள் மற்றைய மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல இருப்பினும் தற்போதும் சமூக, பொருளாதார, கல்வி, மற்றும் அரசியல் களங்களில் இன்னும் பின்வரிசை ஆசனங்களையே பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பெண்கள் உரிமைகள் தொடர்பில் அனைத்து மக்களும் அறிந்திருப்பது மிக அவசியமானது.
பெண்கள் உரிமைகள் என்பது, குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் தராதரத்தை உயர்த்துவதும், சட்டத்தின் சமமான நடத்துகையையும் மற்றும் சமமான பாதுகாப்பையும்; உறுதிப்படுத்துவதுமான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களாகும்.
பெண்கள் உரிமைகளானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் குடியியல், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை உள்ளடக்கியதாகும். இவை சர்வதேச மற்றும் பிராந்திய சமவாயங்களினாலும், அதேவேளை உள்நாட்டுச் சட்டங்களினாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளன.
பெண்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டவாக்கங்கள்
பெண்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டக்கட்டமைப்பானது பின்வரும் ஆவணங்களுக்கூடாக அடையாளப்படுத்தப்பட முடியும்.
- ஐக்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (யூ.டி.எச்.ஆர்)
- அனைத்துலக பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் சமவாயம் (ஐ.சீ.ஈ.எஸ்.சீ.ஆர்)
- அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயம் (ஐ.சீ.சீ.பீ.ஆர்)
- பெண்களுக்கெதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம் (சீடோ)
அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (யூ.டி.எச்.ஆர்)
உறுப்புரை 02 – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயமுடைமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், ஆதனம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவார்.
உறுப்புரை 07 – எல்லோரும் சட்டத்தின் முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றிச் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கும் உரித்துடையவர்களாவர்கள். இப்பிரகடனத்தை மீறிப் புரியப்பட்ட பாரபட்சம் எதற்கேனும் எதிராகவும் அத்தகைய பாரபட்சம் காட்டுவதற்கான தூண்டுதல் யாதேனுக்கும் எதிராகவும் எல்லோரும் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள்.
உறுப்புரை 16 (1) – முழு வயதடைந்த ஆண்களும், பெண்களும் இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமான கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும் ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி.
வாழும் பொழுதும், திருமணம் குலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
(2) திருமணம் முடிக்கவிருக்கும் வாழக்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
(3) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும், அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.
உறுப்புரை 23(2) – ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
உறுப்புரை 25(2) – தாய்மை நிலையம் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும், அவை திருமண உறவினுட் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் பெற உரித்துடையன.
அனைத்துலக பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் சமவாயம் (ஐ.சீ.ஈ.எஸ்.சீ.ஆர்)
பிரிவு 2(2)
பிரிவு 3
பிரிவு 7 (அ) i
பிரிவு 10(1), 10(2), மற்றும் 10 (3)
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயம் (ஐ.சீ.சீ.பீ.ஆர்)
பிரிவு 2(1)
பிரிவு 3
பிரிவு 23
பிரிவு 26
பெண்களுக்கெதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம் (சீடோ)
சீடோ என்பது மனித உரிமைகள் என்ற களத்தில் பெண்கள் உரிமைகளில் விசேட கவனம் செலுத்துகின்ற சமவாயம் ஆகும். அடிப்படை மனித உரிமைகள், பெண்களின் கௌரவத்திற்கும்; மதிப்புக்குமான அர்ப்பணிப்பு, பால்நிலை சமத்துவத்துக்கான உரிமைகள் ஆகியவற்றில் உள்ள நம்பிக்கையினை மீள உறுதிப்படுத்துவதற்கு இந்த சமவாயமானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சீடோ சமவாயமானது சமத்துவம் என்பது என்ன என்பதையும், அதனை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் விபரிக்கின்றது. மேலும் பெண்கள் உரிமையினை உறுதிப்படுத்துவது தொடர்பில் செயல்திறனான நிகழ்ச்சி நிரல் ஒன்று பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் உரிமைகள் தொடர்பான உள்நாட்டு சட்டக் கட்டமைப்பு
இலங்கை 1993ம் ஆண்டில் பெண்களுக்கெதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திட்டது. 1981ம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகளின்
பெண்களுக்கெதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயத்தினை அங்கீகரித்திருந்தது.
மேலும், ஆண்கள் பெண்களுக்கிடையிலான சமத்துவம் தொடர்பிலான கொள்கைகளை அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் இலங்கையில் பெண்கள் உரிமைகள் தொடர்பில் பின்வரும் ஆவணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்:
- 1978ம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பு
- 2005ம் ஆண்டு 34ம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்
- பெண்கள் சாசனம்
1978ம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பு
உறுப்புரை 12 (3) – எந்த ஆளும், இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும், கடைகள், பொது உணவுசாலைகள், விடுதிகள், பொதுக் களியாட்டங்கள், தனது மதத்துக்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றிற்குச் செல்லுதல் தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்துக்கு, பொறுப்புக்கு, மட்டுப்பாட்டுக்கு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டுவருதலாகாது.
உறுப்புரை 12 (4) – இவ்வுறுப்புரையிலுள்ளதெதுவும், பெண்களின், பிள்ளைகளின் அல்லது இயலாமையுள்ள ஆட்களின் முன்னேற்றத்துக்காக சட்டத்தின் மூலம், துணைநிலைச் சட்டவாக்கத்தின் மூலம் அல்லது ஆட்சித் துறை நடவடிக்கை மூலம் சிறப்பேற்பாடு செய்யப்படுவதைத் தடுத்தலாகாது.
பெண்கள் சாசனம்
பெண்கள் சாசனமானது பெண்ணொருவர் கொண்டிருக்கவேண்டிய அரசியல் மற்றும் குடிசார் உரிமைகளான பெண் ஒருவருக்கான குடும்ப அலகுக்குள் இருக்கவேண்டிய உரிமை, கல்வி மற்றும் பயிற்சிக்கான உரிமை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பயன்களுக்கான உரிமை, சுகாதாரத்துக்கும் ஊட்டச்சத்துக்குமான உரிமை, சமூக பாகுபடுத்தல் மற்றும் பால்நிலைசார் பாகுபடுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, வன்முறையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
அத்தோடு, காலத்திற்குக் காலம் இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் முறையற்ற புணர்ச்சி, திருமண உறவுக்குள்ளான கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற புதிய குற்றங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், கற்பழிப்புக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்களின் உரிமைகளைப் பாதிக்கின்றவையான திருமணச்சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
Source: Women In Need